விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கோவையை சேர்ந்த சரண்யா, தனது உடல் உறுப்புகளை 7 பேருக்கு வழங்கி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார். ''மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்கிறாள்'' என்று சரண்யா தந்தை கூறுகிறார்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்த கே.மணியன் - கலாமணி தம்பதியரின் மூத்த மகள் சரண்யா. சிறுவயது முதலே படிப்பில் சுட்டி சரண்யா. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தார். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தார்.
21 வயதான சரண்யா, பி.இ. எலெக்டிரிக்கல் படித்துள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதிதான் தேர்வு முடிவு வந்துள்ளது. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சரண்யா, தனது உறவினர்கள், தோழிகள் 5 பேருடன் சேலத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு காரில் கோவை திரும்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சரண்யா வந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யாவும், தோழி பானுப்பிரியாவும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரண்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தந்தையிடம் கூறிவிட்டனர்.
தான் வளர்த்த மகள் இறந்து போகும் நிலையில் உள்ள சோகம் ஒருபுறம் இதயத்தை கனக்க வைத்தாலும், மகளின் உடல் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு தானம் செய்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும், அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்த தந்தை மணியன், மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சரண்யாவின் ஈரல், இருதய வால்வு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதோடு, இரண்டு நோயாளிகள் சரண்யாவால் வாழ்வு பெற்றனர்.
சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டோடு, இரண்டு பேருக்கு கண்கள் பொருத்தப்பட்டது. சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை, கோவையில் உள்ள 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். சரண்யாவின் உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச்செல்வதை பார்த்த மணியன், அவருடைய மனைவி கலாமணி, தங்கை அர்ச்சனா கண்கலங்கியபடி அனுப்பி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியது.
சரண்யாவின் உடல் உறுப்புகள் பலரை வாழ வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கே.எம்.சி.எச். மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூறினார்.
''ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்'' என்று தந்தை மணியன் கூறியுள்ளார்.
மகளை இழந்த வேதனையிலும், உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்துவிடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள்'' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் மணியன்.
விபத்தில் கோவையை சேர்ந்த மாணவி சாலினா, ஓட்டுநர் செந்தில்குமார், மாணவர்கள் ஆனந்தகுமார், கோகுல் பிரபு ஆகியோர் இறந்தனர். இவர்களில் மாணவி சாலினா, மூளைச்சாவு ஏற்பட்ட சரண்யாவின் தோழி. அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்த இருவரும் எல்.கே.ஜி. முதல் பொறியியல் படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள். பொறியியல் படிப்பில் இருவரும் 93 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தனர்.
சென்னை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் தேர்வு பெற்று ஆண்டிற்கு ரூ.3.56 லட்சம் ஊதியத்தில் பணியாற்றுவதற்காக காத்திருந்தனர். கடந்த 30ஆம் தேதி மாணவி சாலினா இறந்து போனார். நேற்று சரண்யா இறந்து போனார்.
சரண்யா இறக்கவில்லை, 7 பேருக்கு தனது உடல் உறுப்புகளை தானம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
No comments:
Post a Comment