இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிக்கூட விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு தண்டனையாக விடுதியின் வார்டன் படுக்கை விரிப்பைப் பிழிந்து மாணவி தனது சிறுநீரை குடிக்கும்படி தண்டித்தார் எனக் குற்றம்சாட்டப்படும் சம்பவம் இந்திய ஊடகங்களில் பரவலாக அதிர்ச்சியும் ஆத்திரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தினிகேதனில் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்ற பாத பவன் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் தமது மகளுக்கு உடம்பு சரியில்லை என்பதால் நலம் விசாரிப்பதற்காக விடுதியின் வார்டனைத் தாங்கள் தொலைபேசியில் அழைத்ததாகவும், "உங்கள் மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள், அந்தக் கெட்டப் பழக்கத்தை அவள் நிறுத்த வேண்டும் என்பதற்காக அந்தப் படுக்கை விரிப்பைப் பிழிந்து அவள் அந்த சிறுநீரைக் குடிக்க வைத்தேன்" என்று அந்த வார்டன் கூறியதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம்
இதைக்கேட்ட பெற்றோர், மாணவர் விடுதிக்கு சென்று உமா பொடர் என்ற அந்த வார்டனிடம் வாதிட்டுள்ளனர்.
வார்டன் பற்றி பொலிசாரிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால் மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக பொலிசார் முதலில் அந்தப் பெற்றோரை கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.
பின்னர் மாணவர் விடுதியின் வார்டனும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை விஷ்வ பாரதி பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.
சிறார் உரிமை பாதுகாப்புக்கான அரசு ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை கொடுப்பதற்கு சட்டத் தடை உள்ளது என்றாலும், மாணவர்கள் ஆசிரியர்களாலும் பள்ளி அதிகாரிகளாலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதாகத் தொடர்ந்து செய்திகள் அடிபடவே செய்கின்றன.
No comments:
Post a Comment