காலத்துக்கேற்ற சிந்தனைகள்......


இந்தியாவில் 19, 20-ம் நூற்றாண்டுகளில் இருந்த அதிக வறுமைக்கு இரண்டு முக்கியக் காரணங்களை ரானடே (1842-1901) கூறுகிறார். ஒன்று, விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட பொருளாதாரம். இரண்டு, பிரிட்டிஷ் நவீனத் தொழில் பொருட்கள் இறக்குமதியினால், நலிவடைந்த சிறு கைவினைத் தொழில்கள். “ஒரு பொருளாதாரத்தில் எல்லாத் துறைகளும் சமமாக வளர வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் பின்தங்கிய தொழில் துறையை நவீனப்படுத்தினாலே இந்தியப் பொருளாதாரம் வளரும்” என்று ரானடே கூறிய காலத்தில், அதிலிருந்து காந்தி வேறுபட்டார்.
காந்தியின் சூத்திரம்
‘‘விவசாயம்+தொழில்+வியாபாரம் என்று பொருளாதாரத்தை வடிவமைக்க வேண்டும்’’ என்று ரானடேவும் மற்றவர்களும் கூறியபோது, ‘‘விவசாயம்+கைவினைத் தொழில் மட்டுமே போதுமானது. இதனால் மட்டுமே இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் வறுமையை ஒழித்து, கிராம சுயாட்சி என்ற நிலையை ஏற்படுத்த முடியும்’’ என்று காந்தி வாதிட்டார்.
அன்றைய இந்தியாவில் மூலதனம், தொழிநுட்ப அறிவு குறைவாகவும்… மக்கள் தொகை, நிலம் அதிகமாக இருப்பதையும் கருத்தில்கொண்டு, உழைப்பை மையமாகக் கொண்ட கைவினைத் தொழில்கள் வளர வேண்டும் என்று காந்தி கூறினார். ‘இந்தியாவில், வருகின்ற பல தலைமுறைகளுக்கும் மக்களின் அதிகரிக்கும் வறுமைக்கும் இயந்திர சக்தியைப் பயன்படுத்தித் தீர்வுகாண முடியாது. நம் மக்கள் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் பயன்பாடற்ற உழைப்பு நேரமும் அதிகம். இதில் இயந்திரங்களைப் பயன்படுத்தி மனித சக்தியை விரையமாக்குவது தற்கொலைக்குச் சமமானது’ என்று 1934-ல் தொழிநுட்ப வல்லுநர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிடுகிறார்.
அதிக மக்கள்தொகை உள்ள நாட்டில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு இயந்திரமயமாக்கலை எதிர்க்கும் காந்தி, ‘நவீன தொழில் துறை குறைந்த கூலி, மோசமான தொழில் சூழலை உருவாக்குவதோடு, வளங்களை ஒரு சிலரிடம் குவிக்கவும் வழிவகுக்கிறது’ என்ற நம்பிக்கையைக்கொண்டிருந்தார். எனவே, மூலதனத்தைக் குறைவாகவும், உழைப்பை அதிகமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய காந்தி, இயற்கை வளங்களையும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மூலதனத்தை யும் நிலத்தையும்விட உழைப்பை மையமாகக் கொண்ட உற்பத்தி முறை மட்டுமே சமத்துவத்தை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி. மேலும், நவீன தொழில் துறையின் அதிக உற்பத்தியை விற்க, இங்கிலாந்துபோல நாமும் மற்ற நாடுகளை நம்ப வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்.
காந்தி ஆதரித்த இயந்திரமயமாக்கல்
இயந்திரமயமாக்கலை எதிர்த்த காந்தி, சில துறைகளில் வேலையின்மையை ஏற்படுத்தாத இயந்திரப் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார். உருக்கு ஆலை, மின்சாரத் தயாரிப்பு என்ற பல இடங்களில் இயந்திரப் பயன்பாட்டை காந்தி ஆதரித்தார். மலம் அகற்றுவதில் நவீனக் கழிப்பிடங்களுக்கு இடம் உண்டு என்று காந்தி கூறுகிறார். ‘கப்பல் கட்டுதல், இரும்பு வேலை, இயந்திரம் செய்தல், மற்றும் பல கிராமக் கைவினைத் தொழில்களுடன் சேர்ந்தே இருக்கும் என நான் பார்க்கிறேன். இதுவரை தொழில் துறை கிராமங்களையும் கைவினைகளையும் அழிப்பதற்காகவே திட்டமிடப்பட்டன. எதிர்காலச் செயல்முறையில் அவை கிராம மக்களுக்கும், அவர்களின் கைவினைத் தொழிலுக்கும் பணி செய்வதாக இருக்கும்’ என 23.1.1940-ல் ராம் மனோகர் லோஹியாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி கூறுகிறார்.
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் தொழில் துறையில் மூலதனத்தைப் பொதுவுடைமையாக்கினால், காந்தி கூறுகின்ற பல குறைகளைத் தீர்க்கலாம் என்று நம்பினர். இதையும் காந்தி ஏற்கவில்லை.தொழில்மயமாக்கலில் உள்ளார்ந்து முதலாளித் துவம் இருப்பதாக காந்தி நம்பினார்.
மேற்கத்திய நாடுகளில் விவசாயப் பொருளாதாரத்தின் நிலப்பிரபுத்துவத்தின் தொடர்ச்சிதான் தொழில்துறை முதலாளித் துவம் என்பதுபோல இந்தியாவில் சாதிக் கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் விவசாயப் பொருளாதாரமும் கிராமப் பொருளாதாரமும் அமைக்கப்பட்டன. விவசாயமும் கைவினைத் தொழிலும் உள்ளார்ந்த சாதி அமைப்பைக் கொண்டிருப்பதை ஏனோ காந்தி பார்க்கவில்லை. மேலும், ஏற்கெனவே இயந்திரமயமாகிவிட்ட தொழில்களைத் தவிர்ப்பதும் அதற்குப் பதில் கைவினைத் தொழில்களை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதுபற்றித் தெளிவான பொருளாதாரச் செயல் திட்டங்கள் இல்லாமல் இருப்பது காந்தியச் சிந்தனைகளில் உள்ள ஒரு குறைபாடு.
சில குறைகள்; சில நிறைகள்
இயந்திரமயமாக்கலினாலும் தொழில்மயமாக்கலி னாலும் ஏற்படும் இன்னல்களை காந்தி பட்டியலிட்டதில் பல இன்றுவரை தொடரத்தான் செய்கிறன. ஆனால், மேலும் பலவற்றுக்குப் புதிய விடைகள் கண்டு பிடித்திருப்பதையும் காண முடிகிறது. தொழில்மயமான காலத்திலிருந்து வேலையின்மை நம் நாட்டில் குறைந்திருப்பதை மறுக்க முடியாது. கிராம மக்கள் நகரம் நோக்கிச் செல்ல தொழில் துறையும் இயந்திர மயமாக்கலும் முக்கியக் காரணங்கள் என்பதையும் மறுக்க முடியாது. தொழில் துறையும் விவசாயம் இயந்திரமயமாக்கலும் நம் பெரிய மக்கள்தொகைக்கு வேண்டிய பொருட்களையும் உணவையும் அளித்தன. கல்வி வளர்ச்சி, தொழிநுட்பக் கல்வி, குறிப்பாக, தொழிலாளர்களுக்குத் தொழில்நுட்ப மறுபயிற்சி எனப் பலவகைகளிலும் வேலையின்மையைப் போக்க முடியும் என நாம் அறிந்துள்ளோம். ஆனால், நவீன பொருளாதாரம் நாம் மறுகட்டமைப்பு செய்ய முடியாதபடி சுற்றுச்சூழலையும் கலாச்சாரச் சின்னங்க ளான கைவினைப் பொருட்கள் உற்பத்தியையும் அழித்துவிட்டன. வறுமையைக் குறைப்பதில் நாம் முன்னேற்றம் அடைந்தாலும், செல்வங்கள் ஓர் இடத்தில் குவிவதை நம்மால் தடுக்க முடியவில்லை. நவீனப் பொருளாதாரத்தில், சமுதாயம் சார்ந்த, அறம் சார்ந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, சுய நலமும் போட்டியும் பொறாமையும் கொண்ட வாழ்க்கையைப் போற்றி வளர்க்கிறோம்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் காலத்தைக் கடந்த சிந்தனைகளும், இலக்கியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவரின் வரலாற்று அறிவும் சமகாலப் பிரச்சினைகளும் அவரின் சிந்தனைகளை வடிவமைக்கும். இந்திய சுதந்திர வரலாறு, அன்றைய பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய அறிவு காந்திய சிந்தனையைத் தெரிந்துகொள்ள மிக முக்கியமானவை. இவை மட்டுமல்லாமல், நம்முடைய சமகாலப் பிரச்சினைகளும் நாம் பெற்ற வேறு பலரின் சிந்தனைகளும் காந்தி பற்றிய நம்முடைய புரிதலை வடிவமைக்கின்றன. நம் சமகாலப் பிரச்சினைகள் கடந்த காலப் பிரச்சினைகளிலிருந்து வேறுபடும்போதெல்லாம், நம் எல்லாக் கேள்விகளுக்கும் நம் முன்னோர்களின் சிந்தனையில் விடைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அதேநேரத்தில், நம் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த வரலாற்று அறிவு முக்கியமாகிவிடுகிறது. ‘ஹிந்த் ஸ்வராஜ்’இதழின் முன்னுரையில் காந்தி அவரின் சிந்தனைகள்பற்றி ‘என்னுடையது, ஆனால் என்னுடையது அல்ல’என்று கூறுகிறார். சிந்தனைகள் காலத்துக்கேற்ப மாறக் கூடியவை.
- இராம.சீனுவாசன், இணைப் பேராசிரியர், பொருளாதார அளவியல் துறை