அரசுத் தரப்பு வழக்குரைஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஏ.கே.சிங் மற்றும் யூனிடெக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரிகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ. சார்பில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஏ.கே.சிங் ஆஜராகி வந்தார். அவர் இவ்வழக்கை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான யூனிடெக் நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திராவுடன் பேசுவது போன்ற சிடி சமீபத்தில் வெளியானது. இதையடுத்து ஏ.கே.சிங்கை அரசு பதவிநீக்கம் செய்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிடியில் உள்ளது உண்மையான உரையாடல்தானா என்பதைக் கண்டறிவதற்காக, அதை தடயவியல் ஆய்வுக்கு சிபிஐ அனுப்பியது. அதைத் தொடர்ந்து, ஏ.கே.சிங் மற்றும் சஞ்சய் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரிகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ஏ.கே.சிங் மற்றும் சஞ்சய் சந்திரா ஆகியோருடன் குறிப்பிட்ட அறையில் இருந்த யாரோ ஒருவர்தான் இந்த உரையாடலைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தன. சிடி குறித்த தடயவியல் அறிக்கை வந்த பிறகே சஞ்சய் சந்திராவின் ஜாமீனை ரத்து செய்வது குறித்து சிபிஐ கோரும் என்றும் தெரிகிறது.
No comments:
Post a Comment