பாகிஸ்தான் வசம் 90 முதல் 110 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், அதே சமயம் இந்தியா வசம் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே இருப்பதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களும், பாதுகாப்புப் பிரச்னைகளும் என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகளை தயாரிப்பதிலும், போர்விமானங்களை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 90 முதல் 110 அணு ஆயுதங்களை அந்நாடு வைத்திருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன.
2008ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு பதிலடியாகத்தான் இதுபோன்ற ஆயுதப் பெருக்கத்தில் பாகிஸ்தான் ஈடுபடுகிறதா எனத் தெரியவில்லை. இந்தியா தன் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காகத்தான் அணு ஆயுத எண்ணிககையை பெருக்கிக் கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவுடன் அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. எனினும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இருந்தால்தான் இது சாத்தியம்.
தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் உணரும் வகையிலான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை இருந்து வரும் நிலையில், அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இந்தியா பாரம்பரியமான ஆயுதங்களையும், போர்முறைகளையும் மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் வகையிலான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.
உதாரணமாக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய எஃப்-16 ரக விமானத்தில் மாற்றம் செய்து, அதில் அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்கும் வகையில் பாகிஸ்தான் மேம்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment