2ஜி வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவரது முன்னாள் உதவியாளர் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார். சிபிஐ விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளில் அவர் உறுதியாக இருந்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது அவரது கூடுதல் தனிச் செயலராகப் பணியாற்றியவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. 2ஜி வழக்கில் இவரும் முக்கிய அரசுத் தரப்புச் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் 7-வது சாட்சியான அவர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் அளித்த சாட்சியம்:
1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஆ.ராசாவுடன் பணியாற்றினேன். அவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது யூனிடெக், டி.பி.ரியால்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு பெரிய கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தங்களது திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிர்வாக இயக்குநர் சந்திரா ஆகியோர் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர் சண்டோலியா ஆகியோரை அவ்வப்போது சந்தித்துப் பேசுவார்கள்.
2007-ம் ஆண்டு செப்டம்பர் - டிசம்பர் மாதங்களிலும் அவர்கள் ஆ.ராசாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்தது ஆ.ராசாவின் கையெழுத்துதான். அந்தக் கடிதம் ராசாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு 9 மணிக்கு மேல் 11.30-க்குள் தட்டச்சு செய்யப்பட்டது. இதற்காக ராசா என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பதாகவும் அதற்கு உடனடியாகப் பதில் எழுத வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். நள்ளிரவு வரை அவரது இல்லத்திலேயே தங்கியிருந்தேன். சுமார் 11.30 மணிக்கு கடிதத்தை தயார் செய்து அனுப்பினோம்.
கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் கனிமொழியும், சரத்குமாரும் தொடர்பு கொண்டிருந்தனர்.
தமிழக ரேஷனும் 2ஜி விற்பனையும்: முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதை அதிகாரிகளுக்கு விளக்குவதற்காக தமிழக ரேஷன் கடைகளுடன் 2ஜி விற்பனையை ஆ.ராசா ஒப்பிட்டார். "ரேஷன் கடைகளில் முதலாவது கவுன்டரில் பணத்தைக் கொடுத்து ரசீதைப் பெறுவார்கள். பிறகு அடுத்த கவுன்டரில் ரசீதைக் கொடுத்து பொருள்களைப் பெற வேண்டும். முதல் கவுன்டரில் இருந்து ரசீதைப் பெற்றுவிட்டு சிகரெட் பிடிக்கவோ, டீ சாப்பிடவோ வெளியே சென்றுவிட்டால், இரண்டாவது கவுன்டரில் முதலாவதாக நுழைய முடியாது' என்று ராசா விளக்கினார் என்றார் ஆச்சாரி.
No comments:
Post a Comment