‘‘உசுரோட இருக்கீங்களே… அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா…’’ - சுமார் 30 ஆண்டு களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூருக்கு அருகில் உள்ள சிறு கிராமம். குடிநீருக்கே அவ்வளவு சிரமம். எங்கும் வறட்சி. வேறு வழியில்லாமல் ஊர்கூடித் தேர்தலைப் புறக் கணித்தது. அப்போது அந்தக் கிராமத்துக்கு வந்த ‘தேர்ந்த அரசியல்வாதி’ ஒருவர் மக்களிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
நோட்டா சொல்வது என்ன?
கேட்கச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் இது நேரடியாக உணர்ந்த உண்மை. அப்போது 49 ஓ, நோட்டா என்கிற நவீன தேர்தல் மறுப்பு வடிவங்களெல்லாம் வரவில்லை. இப்போது முன் னேற்றம். நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் தமிழகத் தில் மட்டும் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித் திருக்கிறார்கள். அதாவது 1.4%. புதுவையில் 3%. அகில இந்திய அளவில்1.1% - சுமார் 59 லட்சம் பேர்.
இது தவிர, வாக்களிக்காமலே இருந்துவிட்டவர்கள் சில கோடிப் பேர். இந்த விதமான புறக்கணிப்பு மனோபாவம் ஏன் வளர்ந்துவருகிறது என்று எந்த அரசியல் கட்சியாவது சுயபரிசீலனை செய்திருக்கிறதா?
இப்படி இருந்தாலும், எதை அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்களுக்கான பிரதிநிதிகளை வாக்காளப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு தொண்டுநிறுவனம் கொடுத்திருக்கிற கணக்கு வியக்கவைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி-க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, அ.தி.மு.க. என்று பல கட்சிகளும் இதில் அடக்கம். மொத்த எம்.பி-க்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் (அவர்கள் காட்டியுள்ள குறைந்தபட்ச சொத்துக் கணக்குப்படி).
பலங்கள் தேவை
இதன்படி வாக்காளர்கள் என்ன அளவுகோலின்படி வாக்களிக்கிறார்கள் என்பதைவிட, வேட்பாளர்கள் என்னென்ன தகுதிகளின் அடிப்படையில் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. குற்றப் பின்னணி, அடியாள் பலம், தேர்தல் செலவுக்கான பணபலம், பணப் பட்டுவாடாவுக்கான தனிபலம், இவற்றைத் தவிர, விளம்பரப்படுத்திக்கொள்வதற்கான பலம் - எல்லாம் சேர்ந்தால்தான் இப்போது வேட்பா ளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது.
நேர்மையாளர்களுக்குத் தண்டனை
சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா? நேர்மையான, எளிமையான, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை கொண்ட, சொத்து சேர்க்காத அரசியல்வாதியான காமராஜர் 1967-ல் விருதுநகரில் மாணவர் தலைவரான சீனிவாசனைவிட 1,285 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியடைந்தபோது சொன்னார்: ‘‘மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்.’’
எளிமைக்குப் பெயர்போன இன்னொரு தலைவரான கக்கன் 1967 தேர்தலில் மேலூரில் ஓ.பி. ராமனிடம் தோற்றுப்போனார். பிறகு, 1971-ல் பெரும்புதூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது அங்கும் தோற்கடிக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி 1977-ல் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தார். சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயரெடுத்த இரா. செழியன் 1984-ல் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை வைஜயந்தி மாலாவிடம் தோற்றுப்போனார்.
தற்போது வாழும் அரசியல்வாதிகளில் நேர்மைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு தனது போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றவர்; ஆற்று மணலை எடுப் பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியிருப்பவர். அவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிட்டபோது அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை.
தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு அணை, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் என்று பலவற்றுக்காகவும் போராடிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்காக 19 மாதங்கள் பொடா சிறையில் இருந்தவர். இருந்தபோதும் 2004-ல் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக் தாகூரிடம் தோற்ற வைகோ, நடந்துமுடிந்த தேர்தலில் அதே விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.
அணுசக்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் 15,314 மட்டுமே.
எந்த அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்?
தமிழகத்தின் மீது அசலான அக்கறையுடன், தன்னுடைய குறைந்தபட்ச நேர்மையை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் நின்ற பல வேட்பாளர்களுக்குத் தமிழகம் தந்திருக்கிற எதிர்வினை இதுதான். காம ராஜர், கக்கனில் துவங்கி வைகோ வரை நீள்கிற இந்த விதமான எதிர்வினைகள், தமிழக அரசியலில் சற்று ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழாதா என்று எதிர்பார்த்திருந்தவர்களைச் சலிப்பில் ஆழ்த்தியிருக் கின்றன. கருத்துக் கணிப்பாளர்களையும் கூடக் குழப்பியிருக்கின்றன.
ஏற்கெனவே, தேர்தல் ஜனநாயக முறையில் நம்பிக்கை இழந்த நிலையில், நோட்டாவுக்கு வாக்களிப் பவர்களும், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் இருப்ப வர்களும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் - பலரிடம் எழக்கூடிய இயல்பான கேள்வி.
‘‘எந்த அடிப்படையில் இங்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்? வாக்காளர்களின் தகுதியும் நேர்மையும், அவர் கடந்து வந்திருக்கிற வாழ்க்கையும்கூட இங்கு ஒரு பொருட்டில்லையா? வேட்பாளர்களின் தகுதியைப் புறம்தள்ளி அவர் மீதிருக் கும் குற்றப் பின்னணி, வழக்கு இத் யாதிகள், சாதியம் அல்லது மதம் சார்ந்த ஆதிக்கம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய உளவியலை எப்படிப் புரிந்து கொள்வது? தேசிய அளவிலும் மாநில அளவிலும் வெவ்வேறு ஊழல் வழக்குகளில் பிணைக்கப் பட்டிருப்பவர்களின் பின்னணி இங்கு அநாவசியமான ஒன்றா? தொடர்ச்சியான இலவசங்கள், கவர்ச்சியாகக் கட்டமைக்கப்படும் விளம்பரங்கள், இறுதி நேரத்துப் பட்டுவாடாக்கள்தான் படிப்படியாக வாக்காள மனங்களை நகர்த்தி வாக்குப்பதிவு இயந்திரத்திடம் கொண்டுசேர்க்கின்றனவா?’’
இதைப் படிக்கும் உங்களுடைய மனதில்கூட இதே கேள்விகள் வேறு வடிவில் தோன்றியிருக்கலாம். நெருக்கடி நிலையை அடுத்து நடந்த தேர்தலைத் தவிர்த்து, அனுதாபம், பணபலம், மதம், சாதி உணர்வு கள்தான் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் என்றால், ஜனநாயகத்தை அர்த்தமிழக்க வைப்பது யார்?
                               - மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,