WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, September 30

பெண் கல்வி போராளி மலாலாவுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 'மனித நேயர்' விருது வழங்கி கவுரவித்தது!!


பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது   இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.
உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
இவ்விருதை பெற்றுக்கொண்ட மலாலா பேசியதாவது:-
பாகிஸ்தானில் நான் பிறந்து வளர்ந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு சொர்க்கம் போன்ற பூமியாகும். எனினும், பெண் கல்வியை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்தும், மாணவிகளின் கையில் இருந்து கல்வி உபகரணங்களை பறித்து தூர எறிந்தும் மிரட்டியதால் அந்த பகுதி அபாயகரமான பகுதியாகி விட்டது.
தாங்கள் பள்ளிகளுக்கு செல்வது தலிபான்களுக்கு தெரியாமல் இருக்க, மாணவிகள் தங்களது புத்தகங்களை ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இந்த கொடுமைகளை எதிர்த்து சிலர் மட்டுமே குரல் கொடுக்க முன்வந்தனர். ஆனால், கல்விக்காகவும், அமைதிக்காகவும் ஒலித்த அந்த சிலரது குரல்கள் வீரியம் மிக்கவை.
தலிபான்கள் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பின்னர் என் சுயநினைவை நான் முற்றிலுமாக இழந்து விட்டேன்.
இங்கிலாந்தின் ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் நான் கண் விழித்தபோது, நான் எங்கே இருக்கிறேன்? என்பது எனக்கு தெரியாது. எனது பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? என்று எனக்கு தெரியாது. என்னை துப்பாக்கிகளால் துளைத்தவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது.
ஆனால், இன்று நான் உயிருடன் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற விழா அரங்கில் கூடியிருந்த ஏராளமானோர் மலாலாவின் பேச்சை கேட்டு வியந்து கைதட்டி பாராட்டினர்.
நோபல் பரிசு தேர்வுக் குழுவின் தலைவர் தார்ப்ஜோர்ன் ஜக்லண்ட் மலாலாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி விழா மேடையில் வாசிக்கப்பட்டது.
'உங்களது வீரம் பெண்கள் தங்களது உரிமைகளுக்கு எழுந்து நின்று போராடும் உத்வேகத்தை தட்டி எழுப்பியுள்ளது. இது அமைதிக்கான முன்முயற்சியாகும்' என தார்ப்ஜோர்ன் ஜக்லண்ட் மலாலாவை வாழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment