பிரதமராகும் தகுதி நரேந்திர மோடிக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து அகில இந்திய அளவில் அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், தான் பிரதமரானால் பாகிஸ்தான், இலங்கை நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மீனவர் பிரச்னையையும், எல்லை தாண்டும் பிரச்னையையும் தட்டிக் கேட்பேன் என்று கூறினார்.
முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான், நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்று மிரட்டிய தீவிரவாதிகளுக்குப் பணிந்து, சிறையிலிருந்த தீவிரவாதிகள் சிலரை அரசு விடுவித்தது.
தவிர, மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 136 படகுகளைக் கைப்பற்றியதுடன், பல மீனவர்களைக் கொன்றது.
குஜராத்தில் 2.5 லட்சம் முஸ்லிம்கள் வீடு, கடைகளை கலவரத்தில் இழந்து தவிக்கும் நிலை முதல்வர் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது. நரேந்திர மோடியால் குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்றது என்று கூறுவதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் போது வ.உ.சி. தலைமையில் உப்புச் சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டதாக திருச்சியில் மோடி பேசியுள்ளார். உண்மையில் உப்புச் சத்தியாகிரகத்தை வ.உ.சி. எதிர்த்தார். அவர் அப்போராட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை.
திருச்சியில் நடந்த போராட்டத்துக்கு ராஜாஜி தான் தலைமை வகித்தார். இந்த வரலாறு கூடத் தெரியாமல் மோடி பேசுவது நகைப்புக்குரியது. மொத்தத்தில் மோடிக்கு பிரதமர் ஆகும் தகுதி கிடையாது.
இந்தியாவை ஒட்டி 8 அண்டை நாடுகள் உள்ளன. இவற்றுடன் சுமுக உறவை மேற்கொள்வதே நல்ல அரசுக்கு அடையாளமாக இருக்க முடியும். ஆனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு உரிமைகளை மீட்போம் என்று மோடி கூறுவது தவறான கருத்து. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும். ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரா என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்று தா.பாண்டியன் கூறினார்.
No comments:
Post a Comment