செல்போன் பயன்படுத்துவோர் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களது எண்ணை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மே 3-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களை அந்தந்த தொலைத் தொடர்பு வட்டாரங்களுக்குள் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இனி நாடு முழுவதிலும் இத்தகைய வசதி கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே எண்ணை தக்க வைத்துக் கொண்டு விரும்பிய செல்போன் சேவை நிறுவனங் களுக்கு மாற முடியும்.
உதாரணமாக சென்னையிலிருந்து ஒருவர் மாற்றலாகி டெல்லிக்குச் சென்றால் அவர் தனது பழைய மொபைல் எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள செல்போன் சேவை நிறுவனத்தின் சேவையைப் பெறலாம்.
இது தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத் தொடர்பு எண் மாற்றும் வசதி தொடர்பான சட்டம் 2009-ன் அடிப்படையில் முழுவதுமான எண் மாற்றும் வசதி (எம்என்பி) நாடு முழுவதும் மே 3-ம் தேதி முதல் அமலாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3-ம் தேதி தொலைத் தொடர்புத்துறை செல்போன் எண் மாற்றம் (எம்என்பி) தொடர்பான விதிமுறையை வெளியிட்டது. இது 6 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இது மே 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று டிராய் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment