என்எல்சி நிறுவனப் பங்குகள் விற்பனையைக் கண்டித்து தொழிலாளர்கள் ஜூலை 3 முதல் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், நாளையுடன்(ஜூலை.13) 11-வது தினத்தை எட்டியுள்ளது.
போராட்டத்தை தீவிரப்படுத்தும்விதமாக நாளை முதல் நெய்வேலி மெயின்பஜாரில் உள்ள காமராஜர் திடலில் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகின்றனர்.என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தொழிலாளர்கள் கடந்த 10 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தும் முகமாக 6-ஆம் தேதி தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம், 9-ஆம் தேதி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம், 10-ஆம் தேதி விதிவிலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை ரத்து செய்தல் உள்ளிட்டப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.போராட்டம் 11-வது தினத்தை எட்டியுள்ள நிலையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த 150 நிர்வாகிகள் காலவரையற்ற போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.
நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளை, முன்னதாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டு வரும்படி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவன்னியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment