தமிழக முதல்வரின் நடவடிக்கையை பார்க்கும்போது, எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே எங்களைவிட்டு அதிமுக பிரிந்திருப்பதாகத் தெரிகிறது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரையில்லாத திருப்புமுனையாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய முதலாளிகளுக்கு அடகுவைத்த காங்கிரஸ் கட்சியையும், மதவெறி பாஜகவையும் எதிர்த்து இடதுசாரிகள் இணைந்து களம் இறங்கியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் இந்திய அளவில் 14 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி உருவானது. இதில் அதிமுகவும் பங்கேற்றது. மேலும், தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு இடம் ஒதுக்குவதாகவும் அதிமுக அறிவித்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுகவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பேச்சையும், நடவடிக்கையையும் பார்க்கும்போது எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே எங்களை கூட்டணியில் இருந்து விலக்கிவிட்டதுபோலத் தோன்றுகிறது. மோடி தலைமையில் ஏற்படும் பாஜக ஆட்சிதான் இந்தியாவுக்கே விமோசனம் அளிக்கும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது ஆபத்தான நிலை. ஆகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக அடிப்படையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இணைந்துள்ளன. தமிழகத்தில் இடதுசாரிகள் போட்டியிடும் 18 இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
No comments:
Post a Comment