உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்கினை வேறொரு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் விவகாரங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி பி.ஆர். சிவகுமார் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் வழக்குரைஞர் ம.பாரி ஆஜராகி தமிழில் வாதிட்டார்.
ஆனால் அவர் தமிழில் வாதிடுவதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை அமர்வு உள்பட உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் முன்னிலையில் தான் தொடர்ந்து தமிழில் வாதிட்டு வருவதாகவும் வழக்குரைஞர் பாரி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை வேறொரு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தில் தமிழும் ஒரு வழக்காடு மொழிதான் என்று வழக்குரைஞர் பாரி கூறுகிறார். ஆனால் இது அரசியல் சாசன சட்ட விதிகளின்படி ஏற்புடையதாக இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கினை மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment