மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், முக்கிய சதிகாரரான டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி, மும்பையில் முக்கிய இடங்களில்,பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டினர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
ஒருவர் தவிர மற்ற பயங்கரவாதிகள் இந்தியப் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டு இறந்தனர். உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாபும் அண்மையில் தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதலுக்கு மும்பை சென்று திட்டம் வகுத்துக் கொடுத்த டேவிட் ஹெட்லி அமெரிக்காவில், அந்நாட்டு உளவு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட ஹெட்லி அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு எதிரான வழக்கு அமெரிக்காவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹெட்லிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment