புதுச்சேரி: பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து சிக்கி தமிழக போலீஸாரின் பிடியில் சிக்காமல், சம்மனையும் வாங்காமல் தொடர்ந்து தலைமறாவாக இருந்து வரும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாண சுந்தரம் எங்கே என்பது பெரும் மர்மமாக உள்ளது. அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் இரண்டு முறையும், கோர்ட் ஒரு முறையம் சம்மன் அனுப்பியும் கூட அவர் அதைப் பெறாமல் தப்பி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வின்போது தனக்குப் பதில் வேறு ஒருவரை செட்டப் செய்து அனுப்பி பரீட்சை எழுதச் செய்தார் கல்யாண சுந்தர் என்பது குற்றச்சாட்டாகும். இதையடுத்து கல்யாண சுந்தரம் மீது விழுப்புரம் மாவட்ட குற்றவியல் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மொத்தம் 8 பிரிவுகளில் அவர் வழக்கு பாய்ந்துள்ளது.
இதையடுத்து விசாரணைக்கு நேரில் வருமாறு கல்யாண சுந்தரத்துக்கு போலீஸார் கடந்த 9ம் தேதி சம்மன் அனுப்பினர். இதை சபாநாயகர் சபாபதி பெற்றுக் கொண்டார். 2 நாளில் கல்யாண சுந்தரத்தை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். ஆனால் சொன்னபடி கல்யாணம் வரவில்லை. இதையடுத்து கல்யாண சுந்தரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபாபதி, சம்மனை 2 பேரை விட்டு போலீஸாரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
இதையடுத்து 15ம் தேதி இன்னொரு சம்மன் போனது. இதையும் கல்யாணசுந்தரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி சபாநாயகர் திருப்பி அனுப்பி விட்டார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் திண்டிவனம் 1வது நீதித்துறை நடுவர் பிரகாஷ் முன்பு போலீஸார் ஒரு மனு செய்தனர். அதில், அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் கையெழுத்தை சோதனை செய்ய வேண்டும் எனவும் அதற்காக கோர்ட் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரகாஷ், விழுப்புரம் குற்றவியல் கோர்ட் அல்லது போலீஸார் முன்பு நாளைக்குள் நேரில் ஆஜராகுமாறு கல்யாணசுந்தரத்திற்கு சம்மன் போனது.
ஒருவேளை நேரில் ஆஜராக முடியாவிட்டால் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு தபால் மூலம் கல்யாணசுந்தரத்தின் வீடு, அலுவலகத்திற்குப் போயுள்ளது. ஆனால் இதுவரை இதுகுறித்து கல்யாண சுந்தரத்திடமிருந்து எந்த சத்தத்தையும் காணோம்.
No comments:
Post a Comment