பக்கத்து வீட்டுப் பொங்கல்.......
வந்துவிட்டது பொங்கல். எல்லா பொங்கலுக்கும் பல் வலிக்க வலிக்க கரும்பைக் கடித்துச் சுவைப்போம். அம்மா தரும் சர்க்கரைப் பொங்கலோ அதைவிடவும் இனிப்பாக இருக்கும். இந்த இனிப்புகள் நம் மனதில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கும். அதுதான் பொங்கல்.
பொங்கல் எனும் அறுவடைத் திருவிழா தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாக்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கொண்டாடப்படுவது முக்கியமானது. சரி, மற்ற மாநிலங்களில் அறுவடைத் திருவிழாக்களை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?
போகாலி பிஹு (அசாம்)
அசாம் மாநிலத்தில் பிஹு என்ற பண்டிகை ஆண்டில் மூன்று முறை கொண்டாடப்படுகிறது: போகாலி பிஹு (ஜனவரி), போஹாக் பிஹு (ஏப்ரல்), கொங்காலி பிஹு (அக்டோபர்). இதில் போகாலி பிஹுவின்போது, கொண்டாட்டத்தின் அடையாளமாக மரங்களில் மூங்கில் துண்டு அல்லது நெற்கதிர்களை வைத்துக் கட்டுவார்கள்.
ஆற்றங்கரையை ஒட்டிய வயல் பகுதியில் வைக்கோலில் ஒரு தற்காலிக கூரையை வேய்து, பக்கத்தில் நெருப்பு மூட்டி உணவு சமைத்து கூட்டாகச் சாப்பிடுவார்கள். பிறகு இரவு முழுவதும் பாடல்களைப் பாடி மகிழ்ந்துவிட்டு, அடுத்த நாள் காலையில் நெருப்புக் கடவுளை வணங்குவார்கள்.
லோஹ்ரி (பஞ்சாப்)
பஞ்சாப்பில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் விழா லோஹ்ரி. மாலையில்தான் இந்த விழா களைகட்டும். அப்போது வயல்களில் நெருப்பு மூட்டி, 5 முறை வட்டமடித்து நடனம் ஆடி அறுவடை செய்த தானியங்கள், பொரி ஆகியவற்றை தீயில் இடுவார்கள்.
நெருப்புக் கடவுளை வணங்கி, நாட்டுப்புற பாடல்களைப் பாடுவார்கள். பஞ்சாபியர்களின் புகழ்பெற்ற பாங்க்ரா நடனம் இதன் முக்கிய அம்சம். பிறகு, பல தானியங்கள் சேர்த்த சப்பாத்தி, வெந்தயக் கீரை கூட்டு செய்து சாப்பிடுவார்கள்.
பட்டம் விடும் திருவிழா (குஜராத்)
குஜராத்தில் உத்தராயண அறுவடைத் திருவிழா மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போது எல்லோரும் சின்னக் குழந்தைகளைப் போல மாறி பட்டம் விட ஆரம்பித்துவிடுவார்கள். வானமே வண்ணத் தோரணம் கட்டியது போலாகிவிடும்.
மாலையில் பட்டங்களுடன் மெழுகுவர்த்தியையும் ஒட்டிவைத்து அனுப்புவார்கள். வண்ணத் தோரணங்கள் எல்லாம் தீபத் தோரணம் ஆகிவிடும். அம்மாக்கள் பொரிஉருண்டை, கிச்சடி செய்து பட்டம் விடும் மாடிப் பகுதிகளுக்குச் சென்று விடுவார்கள். அங்கேதான் சாப்பாடு.
சுக்கி (கர்நாடகம்)
கர்நாடக அறுவடைத் திருவிழாவின் முக்கிய அம்சம் எள்ளுருண்டை. அத்துடன் சர்க்கரை அச்சு எனப்படும் இனிப்பு, கரும்பை தட்டில் வைத்து வழிபடுவார்கள். இந்த இனிப்பை பெண் குழந்தைகள் பக்கத்து வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுப்பார்கள்.
"இனிப்பைச் சாப்பிட வேண்டும். நல்லதே பேச வேண்டும்" என்பது கன்னட பொங்கல் பழமொழியாம்.
No comments:
Post a Comment