WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, January 8

விண்வெளியில் 8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு : உயிர்வாழும் சூழலுடன் பூமிபோல் 2 கிரகங்கள்...

விண்வெளியில் 8 புதிய கிரகங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கெப்லர் விண்கலத்தின் தொலை நோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். இதில் தண்ணீர் இருக்கலாம் என்பதால் உயிர்வாழும் சூழலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதில் 2 கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் உள்ள பூமியைப் போல் எவ்வளவு கிரகங்கள் உள்ளன, எத்தனை கோடி  நட்சத்திரங்கள் உள்ளன என்பது பற்றி கணக்கெடுக்க, விண்வெளி தொலை நோக்கியுடன் கூடிய ‘கெப்லர்’ விண்கலத்தை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா விஞ்ஞானிகள் கடந்த 2009ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பினர். 

இதில் உள்ள போட்டோ மீட்டர் நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளவிடுகிறது. இந்த விண்கலம் ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும் தகவல்களை நாசா விஞ்ஞானிகள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.  கெப்லர் விண்கலம் மூலம் அண்டவெளியில், ‘கோல்டிலாக்ஸ்’ என்ற பகுதியில் 8 புதிய கிரகங்கள் அதன் நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் தண்ணீர் இருக்கலாம் என்பதால், உயிர் வாழும் சூழலுக்கு வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இவற்றில் கெப்லர் 438பி, கெப்லர் 442பி என பெயரிடப்பட்ட 2 கோள்கள் கிட்டத்தட்ட பூமியைப்போல் உள்ளது. இவை இரண்டும் சிவப்பு நிற நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் சூரியனை விட சிறியதாகவும், சற்று வெப்பம் குறைந்ததாகவும் உள்ளன. கெப்லர் 438பி என்ற கோள் அதன் நட்சத்திரத்தை சுற்றி வர 35 நாட்கள் ஆகிறது. இது பூமியை விட 12 சதவீதம் பெரிதாக உள்ளதாகவும், இதில் 70 சதவீதம் பாறைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். கெப்லர் 442பி கோள் அதன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்ற 112 நாட்கள் ஆகிறது. இது பூமியைவிட மூன்றில் ஒரு பங்கு பெரிதாக இருக்கிறது. இதில் 60 சதவீதம் பாறைகள் இருக்க வாய்ப்புள்ளது. 

இந்த கிரகங்கள் உயிர்வாழும் சூழலில் இருக்கவேண்டும் என்றால், பூமி பெறும் சூரிய ஒளி அளவுக்கு, அதன் நட்சத்திரங்களில் இருந்து ஒளியை பெற வேண்டும். அதிக ஒளியை பெற்றால் அதில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடும். குறைந்த ஒளியை பெற்றால், தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறிவிடும்.  கெப்லர் 438பி கோள், பூமியை விட 40 சதவீத ஒளியை கூடுதலாக பெறுகிறது. இதில் உயிர்வாழ்வதற்கு 70 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  கெப்லர் 442பி கோள், பூமியைவிட 2/3 பங்கு ஒளியை கூடுதலாக பெறுகிறது. இதில் உயிர்வாழ்வதற்கு 97 சதவீத வாய்ப்புகள் உள்ளதாம். இது குறித்து ‘ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மையத்தின் தலைவர் டாரஸ் கூறுகையில், ‘‘எங்கள் கணக்குப்படி இந்த கிரகங்களில் உயிர் வாழும் சூழலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’’ என கூறியுள்ளார். இந்த மையத்தின் மற்றொரு பேராசிரியர் டேவிட் கிப்பிங் கூறுகையில், ‘‘இதே போல் எத்தனை கிரகங்கள் உயிர் வாழும் சூழலில் உள்ளன என்பது எங்களுக்கு தெரியாது’’ என்றார்.   இந்த கிரகங்களுடன் சேர்த்து கெப்லர் விண்கலம், இதுவரை ஆயிரம் கிரகங்களை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment