புதிய மக்களவை அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதிக்குள் அமைக்கப்பட்டு விடும். பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் மத்தியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கமிஷன் சூசகமாக கூறியுள்ளது.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து மக்களவை தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகி விட்டது. மே மாத மத்தியில், இறுதியில் நடக்கலாம் என்று தெரிகிறது. தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இப்போதே தயாராகி விட்டது. இப்போதுள்ள 15வது நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் மே மாதம் 31 ம் தேதி முடிகிறது. அப்படிப்பார்த்தால் ஜூன் 1 ம் தேதிக்குள் 16 வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு விட வேண்டும்.
இப்போதுள்ள கணக்குப்படி 78 கோடி பேர் வாக்காளராக உள்ளனர். மக்களவை தேர்தல் நடத்த நாடு முழுவதும் 8 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட 11 லட்சத்து 80 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பணி தொடர்ந்து நடப்பதால் பல மாநிலங்களிலும் புதிய வாக்காளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் வெளியிடவும் கமிஷன் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment