சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத, வார விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு!
பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா கொண்டாட உத்தரவிட்ட மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராணுவத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும் என்று மத்திய பாரதீய ஜனதா அரசு தெரிவித்து உள்ளது. இந்த செயலால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மோடி உறுதி கூறினார். ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்து உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீனவர்கள் பிரச்சினை தீர கண்டிப்பாக நாம் கச்சத்தீவை மீட்டாக வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்தியாவில் அனைத்து தேசிய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment