"மாவோயிஸ்டாக இருப்பது என்பதே குற்றமாகிவிட முடியாது' என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
"இந்திய அரசியலைப்புச் சட்டத்துடன் மாவோயிஸக் கொள்கைகள் ஒத்துப்போகாவிட்டாலும் மாவோயிஸ்டாக இருப்பது என்பதே குற்றமாகிவிடாது; மாவோயிஸ்ட் என்பதால் மட்டுமே ஒருவரை காவல் துறை கைது செய்ய முடியாது; ஒரு தனி நபரோ அல்லது இயக்கமோ வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவர் தனக்கு விருப்பமான கருத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை என்பது அடிப்படையான மனித உரிமையாகும்' என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்தத் தீர்ப்பில் கூறியிருந்தது.
ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள சிறப்பு காவல் படையினர் கைது செய்திருந்தனர். அவரை விடுதலை செய்து, நீதிபதி முகமது முஸ்தாக் மேற்கண்டவாறு தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ சனிக்கிழமை கூறியதாவது:
மாவோயிஸ்டாக இருப்பது என்பதே குற்றமாகிவிட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. காங்கிரஸின் கருத்தும் இதுதான்.
ஆனால், மாவோயிஸ்டுகளாக உள்ள சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கேரள காவல் துறை கைது செய்கிறது. ஒருவர் கொண்டுள்ள கொள்கையின் அடிப்படையில் யாரையும் கைது செய்வதில்லை.
வறுமை காரணமாகவே மாவோயிஸம் வளர்கிறது. பின் தங்கிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள உதவும்.
மாவோயிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அதை கொள்கை ரீதியாக எதிர்கொள்ளவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் பி.சி.சாக்கோ.
டி.ராஜா கருத்து: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா கூறியதாவது:
குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றுகிறார் என்பதாலேயே ஒருவரை குற்றவாளியாகவோ, தேசத் துரோகியாகவோ சித்திரிக்க முடியாது. கொள்கைகள் அடிப்படையில் குற்றத்தை தீர்மானிக்க முடியுமெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சட்டத்துக்கு உட்பட்ட அமைப்பாகவே கருத முடியாது. ஏனெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் "ஹிந்துராஷ்டிரம்' கொள்கையானது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ராஜா கூறினார்.
No comments:
Post a Comment