சுதந்திரச் சிந்தனையாளர்கள் எல்லோருக்குமே விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். வங்க தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வலைப்பதிவருமான அவிஜித் ராய் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மதஅடிப்படைவாதிகளால் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். வங்கதேசம், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றிருந்த அவர், தனது மனைவி ரஃபிதா இஸ்லாமுடன் நடந்து சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். தடுக்க வந்த ரஃபிதாவும் தாக்கப் பட்டுப் படுகாயம் அடைந்திருக்கிறார்.
மதப் பழமைவாதிகளைக் கண்டித்தும், மனித உரிமைகளை வலியுறுத்தியும் தொடர்ந்து இணையத்தில் எழுதிவந்ததற்காக அவிஜித் ராய் கொல்லப்பட்டிருக்கிறார். ‘அன்சர் பாங்ளா 7’ என்ற அமைப்பினர், நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியிருக்கிறார்கள். 1971-ல் வங்கதேசம் புதிய நாடாகப் பிறப்பதற்கு முன்னால் நடந்த அக்கிரமங்களுக்குக் காரணமானவர்களை அவர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்தார். அவர்களைத் தண்டிக்காமல் விடக் கூடாது என்று இடைவிடாது வலியுறுத்திவந்தார். இதனால், மதத்தை இழிவுபடுத்தி அவர் எழுதிவிட்டதாகவும் அதற்காகத்தான் தாங்கள் அவரைக் கொன்றதாகவும் கொலையாளிகள் தரப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் அமலில் இருப்பதைப் போல, மதத்தை அவமதிப்பவர் களைக் கடுமையாகத் தண்டிக்க ‘மதநிந்தனைத் தடைச்சட்டம்’ கொண்டுவரப்பட வேண்டும் என்று மதவாத அமைப்பு ஒன்று வங்க தேசத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அந்த அமைப்புதான் டாக்காவிலும் சிட்டகாங்கிலும் சிறுபான்மைச் சமூகத்தவர் மீதும் அவர்களுடைய வர்த்தக நிறுவனங்கள், தொழிலகங்கள் மீதும் தாக்குதல் நடத்திச் சேதப்படுத்தியது. பெண்களை அச்சுறுத்தியது.
மதவாதிகளைக் கண்டிப்பவர்கள் கொல்லப்படுவது ஒன்றும் வங்கதேசத்துக்குப் புதிதல்ல. ஹுமாயூன் ஆசாத், ரஜீப் ஹைதர், சகோர்-ரூணி போன்றோரும் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது மேலும் தொடருமானால், இருண்ட காலமொன்றை நோக்கி வங்கதேசம் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. வங்கதேச அரசுக்குக் கருத்துரிமையிலும் மனித உரிமையிலும் உண்மை யிலேயே நம்பிக்கை இருந்தால், அவிஜித் ராயைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இல்லாவிட்டால், நாளடைவில் மதவாதிகளின் கை ஓங்கி வங்கதேசம் சீரழிய நேரிடும். மதவாதிகள் அரசியல்ரீதியாக வலுப்பெறுவதை அனுமதித்தால் ஏற்கெனவே மிகவும் பின்தங்கியிருக்கும் நாடு மேலும் மோசமாகிவிடும்.
துணைக்கண்டத்துக்கே சாபக்கேடாகிவிட்டது மதவாதம். சகிப்பின்மை தனது புதிய உச்சத்தை எட்டிவிடுமோ என்ற அச்சத்தை பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமல்லாமல் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களும் ஏற்படுத்துகின்றன. வங்கதேசத்தில் அவிஜித் ராய் படுகொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவில் இடதுசாரியான பன்சாரே சுட்டுக்கொல்லப்பட்டது, 2013-ல் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டது எல்லாம் கருத்துரிமைகள் ஒடுக்கப்படும் கொடுங்காலத்தில் நாம் வாழ்கிறோமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
வளர்ச்சியும் மதவாதமும் எதிரெதிர் துருவங்கள். ஒன்றுக்கொன்று முட்டுக்கட்டை போடுபவை. மதவாதத்துக்கும் சகிப்பின்மைக்கும் துணைக்கண்டம் காலம்காலமாகக் கொடுத்த பலிதான் வளர்ச்சி என்பதை உணரும் தருணத்தில்தான் முன்னேற்றத்தின் வெளிச்சம் நம்மீது விழும். துணைக்கண்டம் முன்னே செல்ல வேண்டிய நேரமிது!
No comments:
Post a Comment