தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார்.
தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.பெரியாரின் வார்த்தைகள்
1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.
தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
காமராஜரின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம்.
No comments:
Post a Comment