பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் பத்திரிக்கை 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பள்ளி வளாகத்தில் குண்டுகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையும் நடைபெற்று வருவதோடு, ரத்தக்கறை படிந்த இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அரசு நடத்தும் மீட்பு அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த 6 தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் மொத்தம் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக ராணுவ பள்ளியில் 6 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பிறகு மாணவர்கள் மீது அந்தக் கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. பள்ளிக்குள் 15 முறை குண்டுகள் வெடித்த சத்தமும் கேட்டதாகக் கூறப்பட்டது 

சம்பவ இடத்தில் இருந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் காலையில் கூறும்போது, "தாலிபன் தீவிரவாதிகள் பள்ளி வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திலிருந்து துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. காயமடைந்த மாணவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே சென்றன” என்றார்.

சம்பவ பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நவாஸ் ஷெரிப் பெஷாவர் விரைந்தார்.

பெஷாவர் கிளம்பும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக காண்பதற்குச் செல்கிறேன். அங்கே சிக்கியுள்ள குழந்தைகள் என் குழந்தைகளைப் போன்றவர்கள்" என்றார்.

பாகிஸ்தானில் நிறைய ராணுவப் பள்ளிக் கூடங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட பள்ளியில் சுமார் 500 பேர் படித்து வந்தனர். ராணுவ வீரர்களின் குழந்தைகள் என்றல்ல மற்ற குழந்தைகளும் இத்தகைய பள்ளிகூடங்களில் படித்து வருகின்றனர். கொல்லப்பட்ட மாணவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்கள். மாணவர்கள் தப்பிக்கவே பல வழிமுறைகளைச் சாதுரியமாகக் கையாண்டனர். ஒருவர் இறந்தவர் போல் நடித்து தப்பியுள்ளார்.

பலர் வகுப்பறைகளில் உள்ள டெஸ்கின் அடியில் ஒளிந்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். காப்பற்றப்பட்ட மாணவர்கள் பயத்தில் உறைந்திருந்தனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பலருக்கு தலையில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. 

பாகிஸ்தானில் பெண் சிறுமிகளின் கல்விக்காக போராடி வரும் நோபல் வென்ற மலாலா கூறும்போது, “இந்த மூர்க்கமான தாக்குதல்களினால் என் இருதயம் சுக்கு நூறாக உடைந்துள்ளது. உலகில் உள்ள லட்சக்கணக்கானோருடன் நானும் உயிரிழந்த, காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக கண்ணீர் விடுகிறேன். நாம் தோற்கடிக்கப்படவில்லை” என்றார். 

தெஹ்ரிக் இ தாலிபான் பொறுப்பேற்பு:

தாக்குதல் சம்பவத்துக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. "பெஷாவர் ராணுவப் பள்ளியில் எங்கள் தற்கொலைப் படையினரே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை குறிவைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். எங்கள் இலக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் மட்டுமே" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது உமர் கொரஸானி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

ராணுவ பள்ளியை குறிவைத்தது ஏன்?

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு காரணம் கற்பித்துள்ளது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு.

"வடக்கு வாசாரிஸ்தானில் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்திருக்கிறோம்.

வேதனையை ராணுவத்தினர் உணரவே இதைச் செய்துள்ளோம்" என தீவிரவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவல்:
தீவிரவாதிகள் ராணுவ உடையில் ஊடுருவினர் என்றும், பள்ளியின் அருகே இருந்த மயானத்தின் வழியாகவே அவர்கள் ஊடுருவி இருக்க வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.