WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, January 9

இணையற்ற எரிபொருள் வளம் மீத்தேன் வாயு: நாட்டின் வளர்ச்சியா? வாழ்வாதாரமா?



தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரி டெல்டா பகுதி. தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதவீதம் இப்பகுதியில்தான் விளைகிறது. விவசாயத்தின் இதயமாக திகழும் இப்பகுதியில் மீத்தேன் எடுக்கப்போவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, கடந்த 4 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதை எதிர்த்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனம் தனது தஞ்சை அலுவலகத்தை கடந்த மாத இறுதியில் காலி செய்துவிட்டது.
மீத்தேன் வாயு திட்டம் உண்மையில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமா? அதை விவசாயிகள் எதிர்ப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. இதற்கு விடை காண இத்திட்டத்தின் முழு அம்சங்களையும் அலசுவதே சரியாக இருக்கும்.
மீத்தேன் உருவாவது எப்படி?
பல்வேறு இயற்கை பேரழிவுகளால் காடுகள் அழியும்போது, அவை மண்ணில் புதைகின்றன. அதிக வெப்பம், மேற்பரப்பில் ஏற்படும் படிமங்களின் அழுத்தம், வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் அவை நிலக்கரியாக மாறுகின்றன. இந்த மாற்றங்களின்போது வெளியாகும் மீத்தேன் வாயு நிலக்கரியுடன் இணைந்து பூமிக்கடியில் சிக்கிக் கொள்கிறது. இதை வெளியில் எடுப்பதே மீத்தேன் வாயு உற்பத்தியாகும்.
மீத்தேன் வாயுவுக்கு நிறம் மற்றும் வாசனை கிடையாது. இந்தியாவில் 710- 948 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 33 மீத்தேன் உற்பத்தி சுரங்கங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால், பயோடீசல், இயற்கை எரிவாயு (மீத்தேன்), புரோபேன், ஹைட்ரஜன் ஆகியவை சுற்றுச் சூழலுக்கு குறைந்த கேடு விளைவிக்கும் எரிபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில், மீத்தேன் எரிவாயு பெட்ரோலைவிட விலை குறைந்ததாக உள்ளது.
மீத்தேனை எடுப்பது எப்படி?
பூமியின் மேற்பரப்பில் இருந்து அதிக ஆழத்தில் நிலக்கரி படிமங்கள் புதைந்திருக்கும். அதில், செங்குத்தாகவும், படுக்கைவசமாகவும் துளை அமைக்கப்பட்டு அதிலுள்ள நீர் வெளியே உறிஞ்சப்படும். இதனால், நிலக்கரி படிமங்கள் மீதான அழுத்தம் குறையும்போது, அதிலுள்ள மீத்தேன் வாயு அதற்கென அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் வழியாக வெளியேறும். அதிக வேகத்தில் நீர் உட்செலுத்தப்படுவதன் மூலம் மீத்தேன் வெளியேற வழிவகை செய்யப்படும். அவ்வாறு வெளிவரும் மீத்தேன் வாயு, குழாய்கள் மூலம் எரிவாயு முனையங்களுக்கு அனுப்பப்படும்.
எதற்காக எடுக்கப்படுகிறது?
சுரங்கம் தோண்டுவதற்கு முன்பாக அங்குள்ள மீத்தேனை வெளியில் எடுத்தால், வெடி விபத்து ஏற்படும். மீத்தேன் வெளியேறி, சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும். மீத்தேன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துவதும் மற்றொரு நோக்கம். இதன் அடுத்தகட்டம் அப்பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாகும்.
உலகில் முன்னாள் சோவியத் யூனியன் பகுதி, மேற்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளே அதிக மீத்தேன் வளத்தை கொண்டுள்ள நாடுகளாக கணக்கிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு முதல் மீத்தேன் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் 1992 ஆம் ஆண்டு முதல் மீத்தேன் எடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 143 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) கன மீட்டர் மீத்தேன் பூமிக்கடியில் இருப்பதாக 2006-ல் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு டிரில்லியன் கன மீட்டர் மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 182 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. நிலக்கரி உற்பத்தியிலும், இறக்குமதியிலும் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. 613 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. 178 மெட்ரிக் டன் இறக்குமதி செய்கிறது. நிலக்கரி வளம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாற்று எரிபொருளை உற்பத்தி செய்வதில் இந்தியா ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நம் நாட்டிலேயே கிடைக்கும் இயற்கை வளமான மீத்தேனை வெளியில் எடுத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஹரியானா மாநிலம், குர்கானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள துபாயைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஜிஇஇசிஎல் நிறுவனத்துக்கு மீத்தேன் வாயு எடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் மீத்தேன் எரிவாயு தயாரிப்பு நிறுவனம் ஜிஇஇசிஎல். தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் காவிரி டெல்டா படுகையில் 667 சதுர கிமீ (1,66,210 ஏக்கர்) அளவில் மீத்தேன் எடுக்க கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2010-ல் அனுமதி அளித்தது.
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக அரசு லைசென்ஸ் வழங்கியது. இத்திட்டத்தை செயல்படுத்த 2012 ஆம் ஆண்டு செப். 12 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிறுவனம் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச் பகுதியிலும் மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ராணிகஞ்ச் பகுதியில் இருந்து இந்நிறுவனம் தற்போது 0.5 எம்எம்எஸ்சிஎம்டி எரிவாயு தயாரித்து வருகிறது. ஒரு எம்எம்எஸ்சிஎம்டி எரிவாயுவால் 242 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். எரிவாயு விலை முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. ராணிகஞ்சில் தயாரிக்கப்படும் எரிவாயு விலை யூனிட்டுக்கு 6.79 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மீத்தேனை குழாய்கள் மூலம் ஐஓசிஎல், பிபிசிஎல் எரிபொருள் நிலையங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். அந்நிறுவனங்கள் தங்கள் கமிஷனை எடுத்துக் கொண்டு, மீத்தேனை விற்பனை செய்யும். இதற்கான சந்தை விலை உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
30 கிணறுகள்
மன்னார்குடி பகுதியில் நிலத்தடி நீருக்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழத்தில் நிலக்கரிப் படுகை உள்ளது. இப்பகுதியில் 30 மீத்தேன் கிணறுகளையும், 50 ஆழ்துளை குழாய்களையும் ஏற்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 3500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சராசரி விலை ஒரு யூனிட்டுக்கு ரூ. 21.56 ஆக உள்ளது.
ஹைட்ரோ கார்பன் இயக்குநர் ஜெனரல் அறிக்கைப்படி, காவிரிப் படுகையில் 0.98 டிசிஎப் மீத்தேன் வாயு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2013-ஆம் ஆண்டு ஜூலையில் இத்திட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், இக்குழு அமைப்பதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இக்குழு அறிக்கை அளிக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
என்ன பாதிப்பு?
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கிபி 2 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பாசனக் கால்வாய்களை கொண்டுள்ளன. இவை பாதிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. மீத்தேன் எடுக்கும் பணியின்போது, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மணிக்கு 100 கேலன் அளவு தண்ணீர் செலுத்தப்படும். பின்னர் உறிஞ்சும்போது மீத்தேன் வெளியேறும்.
இத்திட்டம் நிறைவேறினால், நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போய்விடும். குளோரைடு, சோடியம், பைகார்பனேட் உள்ளிட்டவை நீரில் கலந்து வெளியேறும். கதிர்வீச்சு பாதிப்பு உண்டாகவும் வாய்ப்பு உண்டு. ஒரு கிணறு ஆண்டுக்கு தலா 20 டன் உப்பை வெளியேற்றும். நிலத்தடி நீரில் உப்பு மற்றும் சோடியம் படிவதால் விவசாய நிலம் பாதிப்படையும். வெளியேற்றப்படும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மீத்தேனை வெளியில் எடுக்கும் கிணறுகளில் இருந்து இவ்வாயு கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்யும் வாயுக்களில் ஒன்று. வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற மீத்தேன் வாயுக் கசிவு பெரும் பிரச்சினையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடல்நீர் உள்ளே நுழையும்
1970-களில் நடந்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் (யுஎன்டிபி) ஆய்வில் பங்கெடுத்தவர் நீர்வள ஆராய்ச்சியாளர் நடராஜன். அவர் கூறும்போது, ‘காவிரி டெல்டா படுகையில் உள்ள நிலத்தடி நீரின் அளவு 4.77 டிஎம்சி. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 2.03 டிஎம்சி அடி நீர் வெளியில் உறிஞ்சப்படும் என்று அஞ்சப்படுகிறது. இத்திட்டம் 25 ஆண்டுகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 50.63 டிஎம்சி அடி நீர் வெளியில் உறிஞ்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 5 ஆண்டுகளில் மொத்த நீரும் உறிஞ்சப்படும். இதனால், கடல்நீர் உள்ளே புகுந்து விளை நிலத்தை தரிசாக்கும்.
அலுவலகத்தை காலி செய்தது
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) பிரதிநிதி கடந்த ஆண்டு தஞ்சையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, ‘தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாமல் மீத்தேனை உறிஞ்ச முடியும்’என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது வாக்குறுதியை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை. விவசாயிகள் தொடர்ந்து அளித்துவரும் நெருக்கடியால் இந்நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி தஞ்சை அலுவலகத்தை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டது. இந்நிறுவனத்துடன் தமிழக அரசு போட்ட ஒப்பந்தம் கடந்த 4 ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. இருந்தாலும், இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்நுட்பம்
இதுபோன்ற போராட்டங்களால் இந்தியாவின் வளர்ச்சித் திட்டம் ஒன்றை நிறுத்தி விடுகிறோமோ என்ற அச்சம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக சுரங்கத் துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
எரிபொருள் தேவைக்கு திண்டாடி வரும் இந்தியாவுக்கு இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானதுதான். நிலத்தின் மேற்பரப்பை பாதிக்காத வகையில், மீத்தேன் வாயுவை மட்டும் வெளியில் எடுக்கத் தேவையான உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மொத்த விவசாய நிலத்தையும் பயன்படுத்த தேவையில்லை. ஆழ்துளை கிணறு அமைக்க தேவையான இடம் இருந்தாலே மீத்தேன் வாயு குழாய் அமைத்துவிடலாம். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை பயன்படுத்துவார்கள். அதன்பிறகு நிலத்தை விவசாயிகளிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்.
தரைக்கு கீழ் 500 மீட்டர் ஆழத்தில் குழாய் அமைக்கும்போது நிலத்தடி நீரும் பாதிக்காது; நிலத்தின் மேற்பரப்பும் பாதிக்காது. என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீத்தேன் வாயு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, பாதிப்புகளை கவனத்தில் கொள்ள முடியும். விவசாய நிலத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் மீத்தேன் எடுக்க அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் நவீனயுகத்தில் உண்டு. கடல் நீர் உள்ளே வரும் என்ற அச்சம் இருந்தால், அதற்கு தடுப்புச் சுவர் அமைக்க முடியும். வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற முடியும். விவசாய நிலத்தில் உற்பத்தி நிலையங்கள் எதுவும் அமைக்காமல் குழாய் மூலம் தொலைவாக வாயுவை எடுத்துச் சென்று அங்கு உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 5 முதல் 6 ஆழ்துளை குழாய்களை அமைக்க முடியும்.
மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புண்டு. அரசுக்கும் ராயல்டி தொகை மற்றும் வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுப்பதுடன், அந்த நிலத்தின் விலையில் 10 மடங்கு அதிகம் அளிப்பதற்குக்கூட தயங்கமாட்டார்கள். அனைத்து தரப்புக்கும் லாபம் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டியது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பொறுப்பாகும். அவர்களை பொறுப்புடையவர்களாக ஆக்கி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மீத்தேன் வாயு திட்டத்தின் எதிர்ப்பாளரும், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் இதுகுறித்து கூறியதாவது:
இத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கில் ஜிஇஇசிஎல் நிறுவன பிரதிநிதிகள் ஒருமுறைகூட ஆஜராகவில்லை. வழக்கு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.
மீத்தேன் வாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால்தான் நாட்டின் வளர்ச்சி இருக்கும். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ஒரு நாடு எப்படி வளர முடியும்? இத்திட்டத்தால் நிலத்தடி நீர் பாழாகும். விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்துபோகும் என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து விட்டனர்.
நிலக்கரிதான் குறிக்கோள்
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் மீத்தேன் வாயு மட்டுமல்ல. தஞ்சை டெல்டா பகுதியில் இருந்து நெய்வேலி வரை நிலக்கரி படிமங்கள் உள்ளன. தஞ்சையில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். மீத்தேன் வாயுவை எடுக்காமல் சுரங்கம் அமைக்க முயற்சித்தால் வெடிவிபத்து ஏற்படும். எனவே, முதற்கட்டமாக மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் என்று ஆரம்பிக்கின்றனர். மத்தியில் உள்ள பாஜக அரசும் பன்னாட்டு நிறுவனங்களின் சேவை ஆளாகவே செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம் என்றார்.

No comments:

Post a Comment