WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, May 3

தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை!!

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் காந்திய சிந்தனைப் புத்தகங்களைப் படித்து நேரம் போக்குகிறார்.

விழுப்புரம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் சிறையில் நேரம் போக்குவதற்காக காந்திய சிந்தனை புத்தகங்களை படித்து வருகிறாராம். வெளியில் இருக்கும் போது வன்முறை, சிறைக்குச் சென்றால் காந்திய சிந்தனை என்னே ராமதாஸின்  உயர்ந்த கொள்கை.

தங்களது வாழ்கைக்காக தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் தலித் மக்கள் மீது ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட்டு, தங்களின் ரவுடித்தனத்தை அரங்கேற்றிவரும் பாமகவினரின் வன்முறைகளை காந்தியின் அகிம்சையாகத்தான் ராமதாஸ் பார்க்கிறார் போலும்.

தற்போது திருச்சியில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மேலும் சிறையில் இருந்த மரங்களும் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், மின்சாரம் வேறு அவ்வப்போது தடைப்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் ராமதாஸ் கூறுகிறாராம்.

தர்மபுரி, மரக்காணம் தலித் மக்களின் வீடுகள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு தீயிட்டு எரித்தது அவருக்கு குளு குளுவென்று இருந்ததால், திருச்சி வெயில் ராமதாஸுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

மது விலக்கு, மது ஒழிப்பு என்று அய்யாவும், சின்ன அய்யாவும் முச்சூடும் முழங்குவார்கள். ஆனால் இவர்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாடுகளிலேயே ஆண், பெண் பேதமில்லாமல் சரக்கடித்த வரலாறுகள் உண்டு. இவ்வளவு ஏன் கடைசியாக நடந்த வன்னியர் பெருவிழாவில் சின்ன அய்யா முதல்வரானால் முதல் கையெழுத்து மது ஒழிப்புக்குத்தானாம்.

ஆனால் மரக்காணம் சம்பவத்தின் போது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இவ்வாறு பதிவு செய்தது "நல்ல குடிபோதையில் இருந்த ஒரு கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி தலித் குடிசைகளை எரித்தது". இதுமட்டுமல்ல இளைஞர் பெருவிழாவின் போது மரக்காணம், மாமல்லபுரம், புதுவை ஆகிய இடங்களில் மது வழக்கத்தை விட அமோகமாக விற்பனையாகியுள்ளது. ஆக மேடையில் மதுவிலக்கு என்ற முழக்கம், தெருவில் குடிபோதையில் வெறியாட்டம். இதுதான் இவர்கள் கொள்கை.

ராமதாஸ் கைது காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது பாமகவினரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புதுவையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது நிருத்தி வைக்கப்பட்டுள்ளது பயணிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

காந்தியத்திற்கு ஒரு புது விளக்கமே நமக்கு கிடைத்துவிட்டது போங்கள். வெளியில் சுதந்திரமாக உலாவும் போது அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும், நசுக்கும் வன்முறையை பிரயோகிக்கலாம், சிறையில் அடைக்கப்பட்டு தன் சுதந்திரம் இழக்கப்படும் நிலையில் காந்தியம் ஓதலாம். இதுதான் ராமதாஸ் அரசியலின் நகைமுரண்!

No comments:

Post a Comment