WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, October 11

புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியானது!!!


புதிய தொலைத் தொடர்புக் கொள்கை -2011 தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபில் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
இதில், செல்போன் பயன்படுத்துவோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு உற்பத்தித் துறையில் ஊக்கமளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியது: ஒரு தேசம், ஒரு உரிமம் என்ற கொள்கை செயல்படுத்தப்படும். மேலும், செல்போன் வாடிக்கையாளர்கள், தற்போது பயன்படுத்தும் அதே எண்ணில் வேறு நிறுவனங்களுக்கு மாறும் வசதி, இலவச ரோமிங் வசதி ஆகியவற்றை செயல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வருமானம் ஈட்டுவது இரண்டாம்பட்சம்தான். தொலைத் தொடர்புத் துறையில் நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்தும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க அரசு பாடுபடும்.
தேவைப்படும் அனைவருக்கும் பிராட் பேண்ட் வசதியை ஏற்படுத்தித் தரும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையம் சார்ந்தப் பொருளாதாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்பதற்கானக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவது உறுதி செய்யப்படும்.
மேலும், புதிய உரிமங்களை வழங்குதல், கொள்கை முடிவுகளை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்தப்படும் என்றார் கபில் சிபல்.
உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம்: தொலைத் தொடர்புத் துறை தொடர்பான உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 2020-க்குள் 80 சதவீத தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலமே பூர்த்தி செய்துகொள்ளும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கென ஊக்கத் தொகையும், குறைந்த வட்டியில் கடனுதவியும் வழங்கப்படும். வரி குறைப்புச் செய்யப்படும். மேலும், தொலைத் தொடர்புத் துறையில் முதலீட்டை அதிகரிக்க, தொலைத் தொடர்பு நிதிக் கழகம் ஏற்படுத்தப்படும்.
தற்போது இத்துறையில் 3 சதவீதம் மட்டுமே உள்நாட்டுத் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்து உள்ளோம்.
12-வது ஐந்தாண்டுத் திட்ட முடிவில் (2012-2017) உள்நாட்டு உற்பத்திக்கானத் தேவை ரூ. 2,50,000 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
மேலும், தொலைத் தொடர்புத் துறையில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான அறிவுசார் சொத்துரிமை, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றிலும் இக்கொள்கையின் கீழ் கவனம் செலுத்தப்படும்.
பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி செல்போன் கருவிகள், சிம் கார்டுகள் ஆகியவற்றிற்கு உள்நாட்டுச் சந்தையை சாந்திருக்க முக்கியத்துவம் தரப்படும்.
தொலைத் தொடர்புத் துறை தரமதிப்பீடு வளர்ச்சி நிறுவனம் என்ற தன்னாட்சி நிறுவனத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தொழிற்துறை, ஆராய்ச்சி நிறுவனம், தொலைத் தொடர்புச் சேவை அளிப்போர், கல்வியாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நிறுவனம் செயல்படும்.
600 மில்லியன் இணைப்புகள்:புதிய கொள்கையின்படி, நாட்டில் உள்ள அனைவரும் பிராட் பேண்ட் இணைப்பைப் பெறும் உரிமை உறுதிப்படுத்தப்படும்.
தற்போது இன்டர்நெட் பயன்பாட்டுக்கான பிராட் பேண்ட் சேவை நகர்ப் பகுதிகளில் மட்டுமே அதிகளவில் உள்ளது. அதுவே கிராமப்புறங்களில் ஜூன் 2011 நிலவரப்படி 1 சதவீதம் மட்டுமே உள்ளது.
இந்நிலையை மாற்றி 2017-க்குள் 175 மில்லியன் பிராட் பேண்ட் இணைப்புகளும், 2020-க்குள் 600 மில்லியன் இணைப்புகளும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் சேவை வழங்கப்படும் என்று புதிய தொலைத் தொடர்புக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இன்டர்நெட்டில் தகவல்களைப் பதிவிறக்கம் செய்யும் வேகம் 256 கே.பி.பி.எஸ் ஆக உள்ளதை 512 கே.பி.பி.எஸ். ஆக அதிகரிக்கவும், அதை 2015-க்குள் 2 எம்.பி.பி.எஸ் ஆகவும், அதன்பின் 100 எம்.பி.பி.எஸ் ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் பிராட் பேண்ட் சேவையை அனைத்துக் கிராமங்களுக்கும் அளிக்கும் வகையில் கண்ணாடி இழைக் கேபிள்களைப் (ஆப்டிக்கல் பைபர்) பதிக்கும் பணி 2014-க்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 20,000 கோடியை செலவிட தொலைத் தொடர்பு ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், அரசின் திட்டங்களான மின் ஆளுமை, இ-பஞ்சாயத்து, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும்.
ஸ்பெக்டரம் ஒதுக்கீடு:ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும், அவற்றை அவ்வப்போது தணிக்கைக்கு உட்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் வெளியீடு:புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை, தொலைத் தொடர்புத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துகளை அறிந்த பிறகு தொலைத் தொடர்புக் கொள்கையின் இறுதி அறிக்கையை வரும் டிசம்பரில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment